Pages

Tuesday, December 7, 2010

தலையிலிருந்து கழன்று விழும் தலைமயிர்                                                     தலையிலிருந்து கழன்று விழும்  
                                                     தலைமயிர் 
   அழகுக்கு அழகு சேர்க்கும்
   அலங்காரம் செய்ய உதவும் 
   பெண்ணழகைப் பேரழகாக்கும்        
    பெருமைமிக்கத் தலைமுடி

இத்தலைமுடி அளவுக்கு அதிகமாகத் தலையை விட்டுக் கழன்றுவிழும் போது, கலங்குபவர்கள் அதிகம். வழுக்கைத் தலை என்று மற்றவர்களால் அழைக்கப்படுவோமே என்று வெட்கப்படுபவர்களும் அதிகம். என் செய்வது ஆரம்ப காலத்திலே எதிலுமே கவலையின்றி, அதிகமாய் இருக்கும் போது அது பற்றிக் கவலை கொள்ளாது, நோய் கண்டவுடன் கலங்குவது யாருடைய தவறு. 

          ஏறக்குறைய ஒரு மனிதனுக்கு 70 - 100  மயிர்கள் நாளொன்றுக்கு உதிர்கின்றன. ஆனால், இக்கணக்கு அதிகரிக்கும் போது அல்லது இழந்த மயிர்களுக்கு ஈடு செய்யும் வகையில் மயிர்கள் உற்பத்தியாகாத போதே தலைமயிர் உதிர்கின்றது என்ற கவலை ஏற்படுகின்றது. இதைவிட வேலைப்பலுவினால் மனம் அமைதியில்லாது நிலைகுலையும் போது தலைமயிர் எம்மைவிட்டு மெல்ல மெல்ல போகத் தொடங்குகின்றது. அதனால், எமது பரபரப்பைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். தேவையில்லாமல் எப்போதும் கவலையில் தோய்ந்து இருக்காதீர்கள். யாருக்குத்தான் கவலை இல்லை. நிறைவான மனதுடன் யார்தான் உலகில் வாழுகின்றார்கள். பிரச்சினைக்கான தீர்வு பற்றிச் சிந்திக்காது. அது பற்றிச் சொல்லிச் சொல்லி கவலைப்படுவது தலமுடிக்கு மட்டுமல்ல. உடல்உள நலத்திற்கும் கேடுவிளைவிக்கும். இதில் கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. தலையில் பேன் என்ற ஒரு ஜீவராசி சந்தோசத்துடன் தலையில் உலாவிவரும் போது தலைமுடி அருவருப்புடன் தலையை விட்டு மெல்லக் விலகும். அதனால் அந்த ஜீவராசியை ஒழித்துக் கட்டும் நடைமுறைகளைக் கையாள வேண்டும். கீழே நான் தந்திருக்கும் வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்தி, இத்தொல்லையிலிருந்து விலகுங்கள். இல்லையென்றால், தோல் வைத்தியரிடம் நாடி இதற்குரிய மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். தைரொய்ட் சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடும் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. தைரொயிட் சுரப்பி சரியான முறையில் தொழிற்படுவதற்கு மருத்துவம் செய்வது நன்று. கடல்மீன் வகைகள், சிறியமீன் வகைகள் இந்நோய்க்கு சிறந்த பலாபலனைத் தரும் என வைத்தியர்கள் கருதுகின்றார்கள். பலவகையான இரசாயணப் பதார்த்தங்களை எமது அழகுக்காகவும் நாகரிகத்திற்காகவும் பயன்படுத்துகின்ற போது ஒவ்வாமை கொண்ட தலைமயிர் ஒதுங்க நினைக்கின்றது. இளையதலைமுறை இதைத் தவிர்க்க மாட்டாது என்பது உண்மைதான், எனவே தரமானவற்றைத் தவிர்த்துக் கொண்டு இயற்கையான மூலிகைத் தயாரிப்புக்களைப் பயன்படுத்துவது உகந்தது என்று நினைக்கின்றேன். தலையில் உருவாகும் இறந்த செதில்களாகக் காணப்படும் பொடுகு தலைமுடிக்குக் கேடாக அமைகின்றது. தலையின் உட்பகுதியில் இருக்கின்ற எண்ணெய்ச்சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கப்படும் போது தலைமுடித் தூவாரத்தினூடாகக் காய்ந்து வெண்மையாக வெளிவருகின்றது. இதுவே பொடுகு எனப்படுகின்றது. ஒரு வாரத்தில் இரண்டுமுறை தலை கழுவுதலும், காற்றோட்டமுள்ள இடத்தில் வாழுதலும் பொதுவாக எல்லாவற்றிற்ம் நல்லது. 

         எனவே நல்ல பலன்களைப் பெற வேண்டுமானால்,மேற்கூறியவற்றுடன் நாம் அதிக கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. தலையைத் துப்பரவாக வைத்திருத்தலும், சத்துணவுகளை உட்கொள்ளலும் தலைமுடிக்குப் பலன்தரும்.

விற்றமின் ஏ தலைமயிர் வளர்வதற்கு உகந்தது. கரட்டிலும், பால் உற்பத்திப் பொருள்களிலும், குடைமிளகாய், மீன் எண்ணெய், போன்றவற்றிலும் விற்றமின் ஏ இருக்கின்றது. எல்லாவிதமான விற்றமின் B க்களும் தலைமுடிக்கு உறுதியைக் கொடுக்கின்றது. விற்றமின் B3 (Niacin) விற்றமின் B5 (Pantothensäure) Vittamin B6 (Pyridoxin) போன்றவைகள் தலைமயிரில் ஏற்படுகின்ற நோய்களை நீக்கி தலைமயிரைப் பாதுகாக்கின்றன. இறைச்சி, முட்டை மஞ்சள்க்கரு, கடலை போன்ற வகைகள்,(Nüsse, (Nuts)) இவற்றில் விற்றமின் B போதுமான அளவில் இருக்கின்றது. ஆனால், அளவுக்கதிகமான விற்றமின்களும் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் அவதானம் எடுக்கவும். இரும்புச் சத்து குறைவாக இருக்கும் போது தலைமுடி உதிர்வதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதனாலேயே இரும்புச்சத்து அதிகமாக உள்ள இறைச்சி, குடைமிளகாய், Broccoli போன்றவற்றை உண்ணும்படி வைத்தியர் பணிக்கின்றார். 

இதைவிட முக்கியமாக தலைக்கு வேண்டிய யோகாசனப் பயிற்சிமுறைகளைக் கையாளுதலும் ( தலைக்கு இரத்தோட்டம் செல்லும்) தலையை மெதுவாக மசாஜ் செய்துவிடுதலும் தலைப்பராமரிப்புக்கு உகந்தது. தலைமுடி கிரட்டின் (Keratin) என்று சொல்லப்படுகின்ற புரதப்பொருளாலான மயிர், உட்தோலின் உட்பகுதியில் நன்றாகப் பதியம் செய்யப்பட்டுள்ளது. அதனால், புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மயிர்கள் உற்பத்தியாவதற்கும், முக்கியமான செல்களுக்கும் உதவுகின்றன. எனவே புரதச்சத்துக்கள் அடங்கிய தாவரப்புரதங்களாகிய உருளைக்கிழங்கு, தானியங்கள், சோயா போன்றவற்றை உண்ணுதல் முநசயவin இற்கு உதவுகின்றது. இந்த மயிர்கள் மெலனின் என்னும் பொருளாலேயே நிறமூட்டப்படுகின்றன. இந்த மெலனின் உற்பத்தி வயதாகிவிட குறைவடைவதனாலேயே தலைமயிர்கள் வெள்ளை, பழுப்பு நிறங்களாக மாற்றமடைகின்றன. தோலிலுள்ள எண்ணெய்ச்சுரப்பிகள் மூலமே எப்போதும் மயிர்கள் எண்ணெய்த்தன்மையாக இருக்கின்றன. இவ்வாறான தன்மைகளையுடைய மயிர்களைப் பாதுகாப்பதற்கு நாம், முழுக்கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.


பேன் தொல்லை நீங்க:

1. துளசி இலை, வேப்ப இலை போன்றவற்றைப் பால்விட்டு அரைத்துப்  
        பின்    தலையிலே தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை தீரும்
2. மலைவேம்பு இலையை அரைத்துத் தலையில் பூச வேண்டும்.
3. சிறிதளவு அரிமதுரம் எடுத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் 
        நன்றாகப் பூசி, 25 நிமிடங்களின் பின் வெந்நீரில் குளித்தவர பேன்  
        அடியோடு மறைந்துவிடும்.

தலைமுடி வளரவும் முடி உதிர்வதைத் தடுக்கவும்:

1. ஒரு கைபிடி அளவு வேப்ப இலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒரு 
        நாள் கழித்து அடுத்தநாள் எடுத்து, மீண் டும் ஒரு முறை இந்நீரைச் 
        சூடாக்கி முழுகி வந்தால் தலைமயிர் கொட்டுவது தவிர்க்கப்படும். 
2. வெந்தயத்தை எடுத்து பவுடராக்கி தேங்காய் எண்ணெயில் ஊற 
       வைக்க வேண்டும். பின் ஒரு வாரத்தின் பின் தினமும் தலையில் 
        தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
3. சுத்தமான 5 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால் எடுத்து ஒரு 
        மேசைக்கரண்டி தேசிக்காய்ச்சாற்றை அதனுடன் கலந்து 
         மயிர்க்கால்களில் மசாஜ் செய்து காயவிட்டுப் பின் கழுவவும். இப்படிச்
         செய்து வந்தால் தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்.
4. இரண்டு முட்டைகளை எடுத்து மூன்று மேசைக்கரண்டி நீருடன் 
       சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். பின் தலைமயிர் வேர்களில் பூசிச் 
        சிலநிமிடங்களின் பின் கழுவலாம். இப்படிச் செய்துவர தலைமயிர் 
        உதிர்வது தடுக்கப்படும். அத்துடன் தலைமயிர் வேர்க்கால்கள் 
        உறுதியடையும்.
5. கறிவேப்பிலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில்க் கலந்து 
       தலையில் காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைமுடி நன்றாக  
       வளரும்.
6. கரட், தேசிக்காய்ச்சாறு இரண்டையும் கலந்து தேங்காய் எண்ணெயில் 
        காய்ச்சித் தலையில் பூசிவர தலைமுடி நன்றாக வளரும்.

மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றிப் பலன்பெறுங்கள். 


ஆரோக்கியமான தலைமயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்


Vittamin A
Vittamin C
Vittamin H
Iron
Copper
Zinc