Pages

Friday, April 15, 2011

கண்களை மேலும் அழகுபடுத்த சில குறிப்புக்கள்

           
இந்த உலகமானது அழகான, அற்புதமான, இரம்யமானது. இதை இரசித்து, இன்புறப் பிறந்தவன் மனிதன்.  காலைக்கதிரவன், மாலைமதியம், விடியலின் விந்தை, துள்ளிடும் கடல் அலை, துடித்திடும் மீன்கள், நீலமேகத்தின்  வெண்முகில் கூட்டம், வியப்பூட்டும் விருட்சங்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் மலர்க்கொத்துக்கள், வகைவகை வேலைப்பாடுகள் கொண்டு பறந்து செல்லும் வண்ணாத்திப்பூச்சிகள், இவ்வாறு அற்புதமான உலகத்தைக் கண்டுகழிக்கும் கண்களைப் பெற்ற மனிதன் பெரும்பேறடைந்த மனிதனாவான். காட்சியை மூளைக்குக் கொண்டு செல்லும் அற்புத கருவியாகிய கண்களைப் கவனமாகவும் கரிசனையுடனும் பாதுகாக்க வேண்டிய அவசியம் மனிதனுக்கு உண்டு.
                    கண்களும் கதைபேசும், கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு மயங்கிய காளையர்கள் ஓராயிரம், மான்விழி, கயல்விழி, இவ்வாறெல்லாம் போற்றிப் புகழப்படும் காந்தக் கண்கள் மற்றையோரைக் கவர்ந்து இழுக்க வேண்டுமானால், அம்மாபெரும் சக்திவாய்ந்த அவ் அற்புதக் கருவியைக் கண்காணிக்க ஆசை எல்லோருக்கும் ஏற்படல் விசித்திரமில்லையே.

கண்களுக்கு நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்கள் ஓய்வு தேவை.

உணவிலே பச்சைக்காய்கறிகள், முட்டை, பாலாடைக்கட்டி (Chesse)    பால் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிழமைக்கு ஒன்று தொடக்கம் இரண்டு தடவை கண்களைக் கழுவுகின்ற தண்ணீரினால் (Eye Wash) கழுவுதல் வேண்டும். 

நீங்கள் எழுதுகின்ற போதும், வாசிக்கின்ற போதுமான வெளிச்சமுள்ள விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அதிகமான வெளிச்சமும் கண்களைப் பாதிக்கும்.  நீங்கள் அதிகூடிய சூரியவெளிச்சத்தில் வெளியில் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் கறுப்புக்கண்ணாடி ( Sun Glass) பாவியுங்கள். இது உங்கள் கண்களைக் குளிர்வடையச் செய்யும். வீட்டிற்கு வந்தபின் கண்களை மூடி, குளிர்தண்ணீரில் துவைத்து எடுத்த பருத்திப் பஞ்சைக் கண்களின் மேல் வைத்தபடிப் படுத்திருக்க வேண்டும். 

வேலைப்பழு காரணமாக உங்கள் கண்கள் களைப்படைந்திருக்கும் வேளையில், உங்கள் முழங்கைகளை மேசையின் மேல் வைத்து இரண்டு உள்ளங்கைகளாலும் இரண்டு கண்களையும் மூடுங்கள்;. தலையின் பாரம் உள்ளங்கைகளில் இருக்க வேண்டும். 

சோர்வடைந்த கண்களுக்கு வெள்ளரிக்காய் சிறப்பானது. கட்டிலில் படுத்தபடி இரு கண்களின் மேலும் இமைகளை மூடி, இரண்டு கண்களின் மேலும் வெள்ளரிக்காயை வட்டமாகச் சிறிதாக வெட்டி வைத்திருந்து சில நிமிடங்களின் பின் எடுங்கள்.

கண்களின் கீழ் தோன்றும் கருவளையம், சுருக்கம் மறைவதற்கு பாதாம்பருப்பு எண்ணெய் (Almond Oil) பூசுவது நல்லது. இதேபோல், தேயிலையை கொதிநீரில் அவித்து, அந்நீரை வடித்தெடுத்து, இந்நீரினுள் பருத்திப் பஞ்சை தோய்த்து கண்களைச் சுற்றி ஒற்றி எடுங்கள். இதை ஒவ்வொருநாளும் செய்தல் நல்லது.

கண்களுக்கான பயிற்சிகள்:

இரண்டு கண்களையும் இறுக்க மூடவும். பின் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு விரிவாகத் திறக்கவும். இப்பயிற்சியைப் பத்துத் தடவைகள் செய்யவும்.

கண்மணிகளை 20 தடவைகள் வலது பக்கமாகவும், இடதுபக்கமாகவும் சுழட்டவும். இப்படிச் செய்கின்றபோது கண்இமை மூடியிருக்க வேண்டும்.

கண்ணாடிக்கு முன் நின்று உங்கள் கண்களைக் கண்ணாடியில் 5 நிமிடங்கள் பார்க்கவும்