Pages

Thursday, December 1, 2011

                                                           
                                             மூளை

 
                
             உலகின் மாபெரும் ஆச்சரியமே - எமை
             உலகில் நடமாடச் செயும் தெய்வமே
             எமதுடலின் தலைமை யகமே
             நீ இல்லையெனில் எமக்கேது வாழ்வே  

           
மனித மூளையானது உலகின் ஆச்சரியமாகக் காணப்படுகின்றது. நாம் பார்க்கின்றோம், பேசுகின்றோம், சாதனை படைக்கின்றோம். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மூளையே. 50 கோடி ஆண்டுகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று உலக சாதனைகளைப் படைக்கின்ற வல்லமை கொண்டதாக காணப்படுகின்றது. மூளையின் இயக்கத்தை முதன்முதலில் அறிந்து கொண்டவர் கிப்போகிரெட்ஸ் என்னும் மருத்தவராகும். முதன்முதலில் மூளை சிந்திக்கத் தொடங்கியது ஆபத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், பசியைப் போக்குவதற்காக உணவிடங்களைத் தேடுவதற்கும் மட்டுமே.  கால ஓட்டத்திலேயே புதியபுதிய விடயங்கள் அவதானிக்கப்பட்டு எண்ணங்கள் விரிவடைந்து புதிய புதிய பல கண:டுபிடிப்புக்களை மூளை கண்டுபிடித்தது. எமது இரண்டு கைகளையும் பொத்திப்பிடித்து ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது எமது மூளையின் அளவை நாம் கண்டுகொள்வோம். 

                                                  
          
                                        ஒரு வளர்ந்தவருக்கு மூளை 200 மில்லியாடன் ( ஒரு மில்லியாடன் - 100 கோடி) நரம்பு உயிர் அணுக்களைக் கொண்டுள்ளது. 100 பில்லியன்(டிரில்லியன்)  வலைப்பின்னல் புள்ளிகளைக் கொண்டிருக்கும். நரம்புப்பாதை கிட்டத்தட்ட 5.8 மில்லியன் கிலோமீற்றரில் அமைந்திருக்கும். இது 5800000000000 மீற்றர். இது 15 தடவை பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரமாகும். ஒரு தொகை வயர் பின்னலைக் காவிக்கொண்டு நாம் திரிவது எமக்கே தெரியாது இருக்கிறது அல்லவா! 
     
             மூளையின் பாரம் 1,3 தொடக்கம் 1,6 கிலோகிராம் ஆகும். இது உடற்பாரத்தின் இரண்டு வீதமாகக் காணப்படுகின்றது. அதற்கு 20 வீதம் மொத்த சக்தி தேவைப்படுகின்றது.

            மூளையானது 90 தொடக்கம் 120 நிமிடங்களே ஒருவிடயத்தை முழுமையாகக் கிரகிக்கும். அதன்பின் 15 – 20 நிமிடங்கள் மூளைக்கு ஓய்வு தேவைப்படுகின்றது. அதனாலேயே பாடசாலைகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் 45 நிமிடம் அல்லது ஒரு மணித்தியாலங்கள் என ஒதுக்கியுள்ளார்கள். அதன்பின் பிள்ளைகள் கவனத்தைத் திசை திருப்பிவிடுவார்கள். ஆனால் நாம் மட்டும் பிள்ளைகளை 24 மணிநேரமும் படியுங்கள் படியுங்கள் என்று போட்டு வறுத்தெடுப்போம்
                                                              

         கரு உருவான மூன்றாவது வாரத்திலிருந்து மூளை வளரத் தொடங்கிவிடுகின்றது. ஆரம்பம் 3 மடிப்புக்களுடன் அமைகின்றது. 3 தொடக்கம் 6 ஆவது மாதம் வரை நன்கு வளர்ந்து பெருமூளை. சிறுமூளை, தண்டுவட்டம் என அதன் பாகங்கள் பிரிந்து விரிவடையும். 3 மாதக்கருவின் எடையில் அரைவாசி மூளையின் எடையாகக் காணப்படுகின்றது. தூங்கும்போது இயங்கும் போது 24 மணித்தியாலங்களும் வெளிச்செல்களை உள்வாங்கி வடிகட்டி தேவையானவற்றை மட்டும் பதிவுசெய்யும். ஓய்வு தேவை என நாம் தூங்கினாலும் மூளையானது ஓய்வில்லாமல் எமக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றது.
           
                       பெண்களின் மூளையானது ஆண்களின் மூளையை விடக் கொஞ்சம் சிறியது. மூளை சிறியது என்பதற்காகப் பெண்கள் அறிவு குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் மூளை சிறியதாக இருப்பதனால், மிகவிரைவில் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. ஆண்களின் மூளையை விட பெண்களுக்கு வலது இடது இருபக்க மூளையும் அதிகமாக செயல்படும் தன்மை பெற்றிருக்கின்றது. இதனால் இவர்களுடைய அறிவுத்திறன் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால், ஆண்கள் ஒரு நேரத்தில் ஒரு வேலையையே அதிகமாகச் செய்வார்கள். பெண்கள் அப்படி இல்லை. அதனால் அதிகமான பயிற்சி அவர்களுடைய மூளைக்கு ஏற்படுகின்றது. அத்துடன் பெண்களின் மூளை ஒலிகளை மிகவும் துள்ளியமாக கேட்கும் திறன் வாய்ந்தது என்பதைச்  சொல்வதில் பெருமைப்பட்டு ஆண்களுக்கு இப்பதிவில் ஒரு பொறாமைத் தன்மையை ஏற்படுத்திப் பார்க்கின்றேன். 
   
                       இந்த மூளையின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையாவன குரோமோஸோம், சில வைரஸ் கிருமிகள், ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்காத நிலை போன்றவையாகும். இதைவிட மூளைக்குச் செல்லுகின்ற இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைந்தாலும் மூளைத்திறன் குறைந்து காணப்படும். புரதம், இரும்பு, கொழுப்பு, மாச்சத்து, போலிக்அசிட், போன்றவை தேவையான அளவு கிடைக்க வேண்டும்.  போதைப்பொருள்களைப் பயன்படுத்தல், அளவுக்குமீறிய குடிப்பழக்கம், தலைக்குச் செல்லும் இரத்தஓட்டம் மந்தநிலையில் இருத்தல் போன்ற காரணங்களினால் மூளைக்கு நோய் ஏற்படுகின்றது.
              மூளையானது நாம் பார்க்கும், கேட்கும் அல்லது பார்த்த கேட்ட விடயங்களை குறைவான நேர பதிவுப்பட்டையில் பதிந்து வைக்கும் .இது ஒரு கரும்பலகை போன்றது. நிரம்பியவுடன் அழித்துவிட்டு வேறு பதிவுகளை அந்தப் பதிவுப்பட்டையில் பதியும். அதிகமாக நாங்கள் மீட்டிப் பார்க்கும் விடயங்களை நீண்ட காலப் பதிவுப்பட்டையில் பதிந்து வைத்திருக்கும். ஒரு விடயத்தைத் திரும்பத்திரும்பத் மீட்டும் போதுதான் அது நினைவில் இருக்கும் இல்லையெனில் மூளையென்னும் கரும்பலகையில் அழிந்துவிடும். இதுவே நாம் இளவயதில் கற்ற பல விடயங்கள் இப்போது நினைவில் இல்லாமைக்குக் காரணமாக அமைகின்றது. ஒரு நாளில் பலவகையான செய்திகள் வந்து சேரும். இச்செய்திகளுடன் தொழிற்படும் செயல் Corpus Callosum என்று அழைக்கப்படும். இரண்டு மூளைக்கும் இடையில் ஒரு பால்கன் (Palkan) என்னும் ஒரு பொருள் இருக்கும். இதுவே இரண்டு மூளையையும் ஒருங்கிணைக்கின்றது. இரண்டு மூளையும் சேர்ந்து தொழிற்படுவதனாலேயே எங்கள் மூளை திறனுடையதாகின்றது. முக்கியமானவை முக்கியமான இடத்தில் பதியப்பட்டிருக்கும். மற்றவை தூசிபிடித்துப் பொருள்கள் கிடப்பது போல் ஏதோ ஒரு இடத்தில் விழுந்துவிடும். அதனாலேயே எங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாதவற்றை எங்கள் மூளை பதிவதில்லை. 
                                         
                     
                                  மூளையில் இருக்கும் இரசாயணப் பொருள்கள் நரம்பின் மூலம் வருகின்ற செய்திகளைப் பெற்று அதற்குரிய தாக்கத்தை வெளிப்படுத்தும். ஒரு மனிதனுக்கு எதையும் செய்யவேண்டும் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுப்பது டொனமின் (Donamin ) என்னும் மூளையில் சுரக்கின்ற இரசாயணப் பொருளாகும். டொனமின் சுரப்பை குறைவாகப் பெற்றிருப்போர் எதையும் செய்வதற்கு ஆர்வம் அற்றவராக இருப்பார். படிப்பில் ஆர்வம் குறைந்த பிள்ளைகளுக்கும் இந்த டொனமின் குறைபாடே காரணமாகும். இதேபோல் சக்தியைக் கொடுப்பதற்கு குளுரமின் (Glutamin) எனப்படுகின்ற சுரப்புத் தேவைப்படுகின்றது. அட்ரேனாலின் ( Adrenalin) எனப்படுகின்ற ஒரு சுரப்பை எமது மூளை எமக்குத் தருவது எந்த சமயத்தில் என்றால், எமக்குப் பயம் ஏற்படுகின்ற போது திடீரென அபார சக்தி ஏற்பட்டு நாம் தொழிற்படுவோம் பயத்துக்குத் தேவைப்படும் பெற்றோல் என்பார்கள். ஒரு நாய் துரத்தி வருகின்ற போது திடீரென ஒருவர் சிறப்பாக ஓடுகின்றார் என்றால், அவருக்கு அட்ரலின் சிறப்பாக வேலை செய்கின்றது என்பது தெரிந்துவிடும். 
                   

                          செரரோனின் ( Serotonin) குறைவாக இருக்கும் ஒருவருக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். இதுவே மனிதர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றது நாம் உணவு அருந்துகின்றபோது இந்த அளவு உணவு எமக்குப் போதும் என எண்ணத் தோன்றும் எண்ணத்தைக் கொண்டுவருவது லெப்ரின் (Leptin) எனப்படும் சுரப்பே. இச்சுரப்பு போதுமான அளவில் இல்லாதவர்களே வயிறு என்ற பாத்திரத்தினுள் உணவைப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். தம்மால் இவ்வுணர்வைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும் மேலும் சாப்பிடவேண்டும் என்று என் உள்ளம் தூண்டிக் கொண்டே இருக்கும் என்று அவர்களே கூறுவார்கள். அவர்கள் உடலைப் பார்க்கும்போது கவலையாக இருக்கும். இது போன்று பல சுரப்புக்களைச் சுரந்து எம்மைத் தமது கட்டுப்பாட்டுக்குள் மூளை வைத்திருக்கின்றது. 

கவனம் எடுக்க வேண்டியவை

வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம். இரண்டையும்  பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் மூளையில் ஞாபகசக்தியை அதிகரிக்கும். வல்லாரை இலை 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து 5 கிராம் தினசரி தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும். நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றைத் தவறாமல் சாப்பிட்டு வர மூளை நல்ல நிலையில் இருக்கும். 

ஞாபகசக்திக்கு உகந்தவை
   

வல்லாரை                                       
பாதாம்பருப்பு

வெண்டைக்காய்            
உருளைக்கிழங்கு

தக்காளி
மாதுளம்பழம்                

என சித்த வைத்தியம் கூறுகின்றது..

மூளை இல்லையென்றால், எமது உடல் இருந்து என்ன பயன்.. உயிர் இருந்து என்ன பயன். உடல் உறுப்புக்கள் பழுதுபட்டால் மூளையால் இயங்கும் உறுப்புக்களைப் பழுது பார்க்கும் அறிவை மூளை கொடுக்கும். ஆனால், மூளை பழுதடைந்தால் எமது கதி அதோகதிதான்.
இப்பதிவைப் பார்த்தவர்கள் நீங்கள் அறிந்த மூளை பற்றிய தகவல்களை பின்னூட்டத்தில் இட்டீர்களானால் மனமகிழ்வேன். மூளை பற்றி யான் எழுதிய ஒரு கவிதையையும் சுவைத்து இன்புறுங்கள்.

                                                  மூளை

நீ படைக்கப்படவில்லை அது உண்மை.
எனக்குள்ளே இருந்து வளர்ந்தாய் - என்
எண்ணமெல்லாம் செயலெல்லாம் நீயானாய்
என் ஆச்சரியமும் நீயே என் ஆண்டவனும் நீயே
என் பொய்யனும் நீயே எனை ஏமாற்றும் பேர்வழியும் நீயே
ஆண்டவரெல்லாம் அப்படித்தான் என்பதனாலோ
எனை ஆளும் நீயும் எனை ஏமாற்றுகிறாய்
கண்ணுக்கு மூடியிட்டு  நான் உறங்க
காணாதவையெல்லாம் கண்டதென்பாய்.
நடக்காதவையெல்லாம் நடந்ததாய்க் காட்டுவாய்
நிழல் படத்தைக் காட்டி
நிஜங்ளையெல்லாம் நடிக்க வைப்பாய்
கண்மூடிக் கழித்திருக்கும் இன்பத்தை
கண் திறக்க மறைக்கச் செய்வாய் - ஆனால்
கனவில் நான் வாழும் களிப்பான வேளைகளை
தானமாய்த் தந்து கணப்பொழுது சுகமாவது பெறவைக்கும்
தலைசிறந்த இயக்குனரே, தயாரிப்பாளரே
நலமாய் நீ வாழ ஊட்டச்சத்து தருகின்றேன்
வாழ்க நீ வளமுடன்.