தலைமயிர் ஒரு மனிதனுக்கு அழகைக் கொடுக்கின்றது என்பது உண்மையே. ஆனால் அதனை நாம் கவனமாகப் பராமரிக்காதுவிடில் அது எம்மைவிட்டு மெல்ல மெல்ல அகன்றுவிடும். அது பற்றி வேறு ஒரு ஆக்கத்தில் தந்துள்ளேன். ஒரு மனிதனுக்கு தலையிலே ஏறக்குறைய 1 இலட்சம் மயிர்கள் உள்ளன. ஒவ்வொரு மயிரும் கிரடின் என்ற புரதப் பொருளினால் ஆனது. இம்மயிர்களின் நிறம் வெள்ளையாகும். ஆனால் தோலிலுள்ள மெலனின் என்று அழைக்கப்படும் தோலிலுள்ள நிறமூட்டியே இத் தலைமயிர்களுக்கு நிறத்தைக் கொடுக்கின்றது. இது 20 வயதிற்குப் பின் உற்பத்தியில் குறைய ஆரம்பிக்கும். அதனையே நரை என்கின்றோம். சிலருக்குச் சிறு வயதிலேயே நரை தோன்றுகின்றது. மஞ்சட் காமாலை, அம்மை, மலேரியா, கதிர்வீச்சு, தைரோயிட்சுரப்பி அதிகரிப்பு, நீரழிவு, இரப்பை, குடல்நோய்கள், இரத்தச்சோகை, போசாக்கின்மை போன்ற காரணங்களினால் இளமையிலேயே சிலருக்குத் தலைமயிரில் நரை தோன்றுகின்றது.
எனவே இப்போது வகைவகையான தலைச்சாயங்கள் உற்பத்தியில் வந்துள்ளன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வெள்ளைமுடிகளை எமக்கு விரும்பிய முறையில் மாற்றியமைக்கலாம்.
தலைமயிருக்கு நிறம் தீட்டுவதற்கு முன் உடலின் ஒரு சிறு பகுதியில் பூசிப்பார்த்தல் வேண்டும்.
எவ்வாறான நேரங்களில் நிறம் பூசக்கூடாது.
1.மாதவிடாய் இருக்கின்ற காலங்களில் 2.பாலூட்டும் தாய்மார்கள் 3.கர்ப்பம் தரித்திருக்கின்ற காலங்களில் 4.தோல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற போது 5.ஆஸ்துமா, இதயநோய்கள், சிறுநீரக குறைபாடுகள் இருக்கின்ற போது பயன்படுத்தக் கூடாது. 6.சாயம் ஒரு சிறிய பகுதியில் பூசிப் பார்க்கின்ற போது எரிச்சல் ஏற்பட்டால், பயன்படுத்தக் கூடாது. 7.தலைமயிர் கொட்டுகின்ற போது இவ்வாறான சமயங்களில் தலைமயிருக்கு சாயம் பூசுவதைத் தவிர்த்துக் கொண்டால் நல்லது.
உள்ளமும் உடலும் ஒருங்கே மகிழ்ந்திருந்தால், மனிதன் வாழ்வில் நோய்நொடி தவிர்ப்பான் என்பது நிஜமே. உடல் உள பாதிப்புக்குள்ளானவர்கள் தமது வாழ்வைத் தாமே முடித்துக் கொள்ளுகின்றனர். இல்லையேல், தாமாகவே நோயைத் தேடிக்கொள்ளுகின்றனர். சூழல், சுற்றாடல், உறவுகள், அபிலாசைகள், ஏக்கங்கள், துயரங்கள், ஓய்வின்றிய உழைப்பு போன்றவை ஒரு மனிதனின் உளநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த உளப்பாதிப்பினையே பிரமகத்தி தோஷம் என்பார்கள். இராமயுத்தத்தின் போது இராமனுக்கு இத்தோஷமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உளநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உம்மென்றிருத்தல், கோபித்தல், ஆர்ப்பாட்டஞ்செய்தல், சண்டையிடுதல் வாய்மடித்தல், பற்களைக்கடித்தல். எழும்பி ஓடுதல், அழுதல், சிரித்தல் போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உளப்பாதிப்புள்ளானவர்களுக்கு புற்றுநோய், இரத்தஅழுத்தம், நீரழிவு போன்ற நோய்கள் இலகுவில் தாக்குவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடலையும் உள்ளத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய மனிதனின் கடமையாகின்றது. யோகப்பயிற்சியின் மூலம் உடல் உளப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யலாம். பிரணாயாமம் செய்வதன் மூலம் உள்ளத்தை அமைதிப்படுத்தமுடியும். இது ஒரு சுவாசப்பயிற்சியாக அமைகின்றது. ஒரு அமைதியான இடத்தைத் தெரிவுசெய்து கொண்டு இரண்டு நாசித்துவாரங்கள் வாயிலாகவும் மூச்சுக்காற்றை உள்ளெடுத்து இரண்டு நாசித்துவாரங்கள் வாயிலாகவும் வெளியிடவும். பின் வலது நாசியினால் உள்ளெடுத்து வலது நாசியினாலேயே வெளியிடவும். பின் இடது நாசியினால் உள்ளெடுத்து இடது நாசியினாலேயே வெளியிடவும். பின் வலது நாசியினால் உள்ளெடுத்து இடது நாசியினால் வெளியிடவும். பின் இடது நாசியினால் உள்ளெடுத்து வலது நாசியினால் வெளியிடவும். ஒவ்வொன்றையும் ஆரம்பத்தில் 5 தடவைகள் செய்து பயிற்சி செய்துவிட்டு பின் மெல்ல மெல்ல அளவுகளைக் கூட்டலாம். பிரணாயாமம் செய்கின்ற போது முள்ளந்தண்டு நேராக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இவ்வாறு மூச்சுப்பயிற்சியின் மூலம் எமது நுரையீரல் மூளை சம்பந்தமான நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆயுள் அதிகரிக்க:
திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்தவர் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஆயுள் பற்றியக் கூறுகின்றபோது
ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே
ஆமையானது மனிதன் போலவே 3 மடங்கு ஆயுளுடையது. இது நிமிடத்திற்கு 3 முறை மட்டுமே சுவாசிக்கக் கூடியது. மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 தடவைகள் சுவாசிக்கின்றான். அப்படியானால் ஒரு மணித்தியாலத்திற்கு 900 தடவைகளாகின்றன. ஒரு நாளுக்கு 21,600 முறைகள் ஆகின்றன. இச்சுவாசத்தை எந்தளவிற்குக் கட்டுப்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு எமது ஆயுளும் அதிகரிக்கின்றது. ஒரு மனிதன் 15 முறைகள் சுவாசித்தால் 100 ஆண்டுகள் வாழலாம். 2 முறைகள் சுவாசித்தால் 750 ஆண்டுகள் வாழலாம். 1 முறை சுவாசித்தால் 1500 ஆண்டுகள் வாழலாம். எனவே ஆயுளை அதிகரிக்கச் செய்து நீண்டகாலங்கள் வாழ்ந்து உலக மாற்றங்களை புதிய கண்டுபிடிப்புக்களை அநுபவித்து வாழ்வதற்கு முனைந்து நிற்போம். ஆனால், இது எப்படி சாத்தியப்படும் என்று எல்லோரும் மூக்கில் விரல் வைப்பது எனக்குப் புரிகின்றது. வாழ்ந்த மனிதர்களைக் காட்டமுடியுமா? என்ற கேள்வி கேட்பதும் என் காதுகளை எட்டுகின்றது. ரிசிகள் பல ஆண்டுகள் வாழ்ந்ததாக ஏடுகள் உரைக்கின்றன. மூச்சைக்கட்டுப்படுத்தி விட்டால் மட்டும் போதுமா? எமது மற்றைய பழக்கவழக்கங்களில்; கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமல்லவா! மூச்சுமுட்ட உணவை உண்டு கொண்டு 100 ஆண்டுகள் வாழமுடியுமா? உணவுப்பழக்கத்திலும் கட்டுப்பாடுகள் வேண்டும். எம்மைச் சுற்றி இரசாயணங்கள் கலந்திருக்கின்றன. தொழில்நுட்பம் நிறைந்த உலகில் இயந்திரமயமாக்கப்பட்ட மனிதன் தன் உடல் உளம் பற்றிச் சிந்திப்பதே இல்லை.சிலர் மற்றையவர்கள் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. அவர்கள் அருகே இருந்து ஊதித்தள்ளும் சிகரெட்டுப்புகையானது அருகே எவ்வளவு மூச்சுப்பயிற்சி செய்து கவனம் மேற்கொள்ளும் மனிதனினுள் சென்று அவன் கவனத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
முற்றுமுழுதாக எம்மால் சிலவற்றைக் கடைப்பிடிக்க முடியாமல் போனாலும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் சிறிதளவாவது எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க்கையை ருசிப்போம்.
பற்களைப் பராமரிப்பது என்பது குழந்தைகளுக்கு பற்கள் நன்றாக வளர்ந்ததன் பின் எனக் கருதக்கூடாது. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது தாயாரின் கடமையாகின்றது. கர்ப்பகாலத்திலும் குழந்தைகளின் பால் பற்கள் ஆரம்பிக்கும்போது அதிக கவனம் எடுக்க வேண்டும். அப்போதுதான் இரண்டாவது பற்கள் சீரான முறையில் வளரக்கூடியதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் கல்சியம் நிறைந்த உணவுகளைத் தாய் உண்பதன் மூலமும் பிள்ளைக்குக் கல்சியம் நிறைந்த பால் போன்ற உணவுகளை வழங்குவதன் மூலமும் பற்சொத்தையிலிருந்து பற்களைப் பாதுகாக்கலாம்.
முதலில் குழந்தைக்கு முதல் பல் உருவாகும் போது பாக்டீரியாக்கள் வாயினுள் குடியேற இடம் அளிக்கக்கூடாது. பொதுவாகத் தாய்மார் குழந்தைகளினுடைய சூப்பியை, கரண்டியைத் தம்முடைய வாயினுள் வைத்து நாக்கினால் வழித்துத் துடைத்துப் பிள்ளைக்குப் பாவிப்பார்கள். உணவை முதலில் தாம் உருசி பார்ப்பதற்காகவும் கீழே விழுந்துவிட்டால் அக்கரண்டியை தமது நாக்கினால் நக்கித் துடைத்துக் குழந்தைக்குப் பாவிப்பார்கள். இதனால் பற்களில் பாக்டீரியா குடியேற வழி இருக்கின்றது. எனவே இதைத் தவிர்த்துவிடவும். பற்களை பருத்தித் துணியினால் துடைக்க வேண்டும் அல்லது மெதுமையான குழந்தைகளுக்கான தூரிகையினால் இரண்டுமுறை துப்பரவு செய்யவேண்டும். ப்ளோரைட் கலக்காத பற்பசையை முதலில் பாவிக்க வேண்டும். முதல் ஆண்டு ப்ளோரைட் மாத்திரைகள் எடுத்தபின் ப்ளோரின் கொண்ட பற்பசையைப் பாவிக்கலாம் என பல் வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றார்கள். குறைவான இனிப்புக்களை உண்ணக் கொடுத்தல், குறைவான இனிப்புப் பானங்களை அருந்தக் கொடுத்தல் அவசியமாகின்றது.
பொருத்தமான பற்தூரிகைகள்
பிள்ளைகளின் கைகளுக்கு அளவான தூரிகைகளை பல் துலக்க கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான விரும்பியதை அவர்களே தெரிவுசெய்ய இடம் அளிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் பல் துலக்குவதில் நாட்டம் கொள்வார்கள். அவர்கள் கைகளுக்கு உகந்த தடிப்பான பிடியுள்ள பற்களின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையக் கூடிய தூரிகையுள்ளதாக இருக்க வேண்டும். முறையாக 6 தொடக்கம் 8 கிழமைகள் தூரிகையை மாற்ற வேண்டும். 6 வருடங்களுக்கு குழந்தைகளுக்கான பிரத்தியேகமான பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டும். இதில் ப்ளோரைட் அளவுகள் சரியான அளவில் அமைந்திருக்கும். 6 வயதிற்குப் பின் வேறு எதுவாகிலும் பயன்படுத்தலாம். ஆனால் அளவில் கவனம் எடுத்தல் வேண்டும்.
பாடசாலைப் பருவத்தினரின் பற் பாதுகாப்பு
பிள்ளைகள் தாமாகவே பற்களைத் துலக்குவதற்கு பெற்றோர் பயிர்ச்சியளிக்க வேண்டும். பெற்றோர் இணைந்து இரவில் பல் துலக்கலாம். ஒருநாளுக்கு 3 தடவைகள் பல் துலக்குவதுடன் இடையிடையே பல்பராமரிக்கும் Chewingum சப்பக் கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் இரவில் பற்களை பார்த்து சரியான முறையில் துலக்கப்பட்டுள்ளதா என அவதானிக்க வேண்டியது பெற்றோர் கடமையாகின்றது. இரவில் சாப்பாட்டின் பின் பல் துலக்கிவிட்டால், உணவு உண்பதற்கோ இனிப்புப் பானங்கள் அருந்துவதற்கோ இடம் அளிக்கக் கூடாது.
பற்பாதுகாப்பு
இனிப்பு, அமிலப் பொருள்கள் பற்களைப் பாதிக்கின்றன. பழங்கள், தேசிப்பளி போன்ற அமிலத் தன்மையுள்ள பானங்களை அருந்தினால் அல்லது இனிப்புப் பொருள்களை உட்கொண்டால் உடனே வாயைக் கொப்பளித்துவிட்டு 20 நிமிடங்களின்பின் பல் துலக்க வேண்டும்.
இந்த வீடியோவை உங்கள் பிள்ளைகளுக்கு காண்பித்து பல் துலக்கும் விதத்தை அறிமுகப்படுத்துங்கள்.
Tuesday, March 20, 2012
பத்திய அட்டவணை (Diet Chart)
எப்படி இந்தப் பெண்களுக்கெல்லாம் அழகான மெல்லிய கொழுப்பில்லாத வாலிப்பான உடல் அமைந்திருக்கின்றது என்று பெருமூச்சு விட்டு மனதுக்குள் புழுங்குகின்ற பெண்கள் எத்தனை பேர் எம்மத்தியில் இருக்கின்றார்கள். என்ன இது வண்டியும் தொந்தியும் இப்படிப் பார்க்க அவலட்சணமாக இருக்கின்றது. காற்சட்டையைப் போட்டால் இடுப்பில் நிற்குது இல்லையே. வழுகி வழுகி தொப்பைக்குக் கீழே அல்லவா வந்து விழுகின்றது என்று கவலைப்படும் ஆண்கள் எத்தனை பேர் எம்மத்தியில் இருக்கின்றார்கள். கொழுப்பைக் குறைத்தால் இந்தக் கவலை குறைந்துவிடும் என்று நம்பினாலும் செய்ய முடியால் அல்லவா இருக்கின்றது. என்ற கவலை இருக்கின்றதா? மனதை முற்றுமுழுதாக திடப்படுத்தி கொள்ளுங்கள். இது அழகுக்கு மட்டுமல்ல ஆயுளுக்கும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது.
சைவஉணவு உண்பவர்கள்:
காலை உணவு:
250 கிராம் பாண் துண்டுகளில் பட்டர் பூசி சாப்பிடலாம். ஓட்தானியம் (Oat) cornflakes ,சீனி இல்லாமல் பாலுடன் சாப்பிடலாம். இவற்றுடன் ஏதாவது ஒரு பழம். கோப்பி அல்லது தேநீர், பால் சீனி இல்லாமல் குடிக்கலாம்.
மதிய இரவு உணவுகள்:
2 அல்லது 3 சப்பாத்திகள் அல்லது 4 துண்டுகள் பாண் இவற்றை சரக்குப் பொருள்கள் சேர்க்காது அவித்த மரக்கறிகளுடன் அல்லது ஒரு சிறிய பாத்திரத்தில் (Bowl) சமைத்த மரக்கறியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
1 சிறிய கிளாஸ் தயிர் அல்லது Butter Milk ஐ உப்பு, சீனி சேர்க்காது குடிக்க வேண்டும்.
அசைவ உணவு உண்பவர்கள்
காலையுணவு:
கொஞ்சம் பழங்கள் அல்லது 1 கோப்பை பழரசம் ( Fruit-Juice) ஒரு முட்டை, பட்டர் பூசிய 2 பாண் துண்டுகள், பால், சீனி கலக்காத 1 கோப்பை தேநீர் அல்லது கோப்பி.
மதியம் அல்லது இரவு உணவு:
சலாட், கோழி சூப், அவித்த அல்லது உலர்த்திய இறைச்சி ஒரு துண்டு அல்லது மீன் ( இரண்டு துண்டுகளுக்கு மேற்படக்கூடாது) 1 நான் (Naan) அல்லது 2 அல்லது 3 சப்பாத்தி, பழம் சேர்க்காத தயிர் அத்துடன் கொஞ்சம் பழங்கள்.
பொதுவாக யாராக இருந்தாலும். இரவில் 6 மணிக்குப்பின் சாப்பிடக் கூடாது.
அனைத்துச் சத்துக்களும் அடங்கிய அளவான உணவை சுவையாக உண்டு ஆரோக்கியமாக அழகாக வாழ்வோம்.
முழங்கை, கால்கள், உதடு போன்ற பகுதிகளில் வீக்கமாகக் காணப்படும்.
மூட்டுக்களில் வீக்கமும் வலியும் இவ்வுடம்பிற்குக் காரணமாகும்.
எனவே கொழுப்பான பகுதிகளையும் உடல் பருமனையும் குறைக்க வேண்டுமானால் உள்ளமும் உடலும் இணைந்தே தொழிற்பட வேண்டும்.
50 வயது கடந்துவிட்டால் நாம் ஆச்சி என்ற நினைப்பு எமது பெண்களுக்கு வந்துவிடும். கட்டையில் போகும் வயதில் எதுக்கு எமது உடம்பை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று அலட்டிக் கொள்வார்கள். ஆண்களோ ஆசைப்பட்டதெல்லாம் வயிற்றுக்குள் அடையத் தொடங்கிவிடுவார்கள். உடலில் கவனம் குறைந்துவிடும். தம்மைவிட்டுத் தமது வாரிசுக்களுக்கே தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் வயதாக வயதாக தம்மை அழகுபடுத்தும் பணியில் கூடுதலான அக்கறை காட்டத் தொடங்கிவிடுவார்கள். இயற்கையாகவே ஒன்றை இழந்துவிடுவோமேயானால் அதை மீண்டும் பெறுவதற்குரிய வழிவகைகளை தேடித்தானே போக வேண்டும். அதனாலேயே ஐரோப்பியர்கள், உடற்பயிற்சி, நடனம், யோகாசனம், நடத்தல், போன்ற நடைமுறைகளில் தம்மை ஈடுபடுத்துவார்கள்.
நடனம் என்பது இளமைக்கு மட்டும் சொந்தமானதல்ல. முதுமைக்கும் ஏதுவானதே. அதை அவதானமாகச் செய்தால் அழகு தேடிவரும். வயதான காலங்களில் எலும்புத் தேய்மானங்கள், எலும்பு வருத்தங்கள் ஏற்படுவது இயல்பே. அதனால் அதனைக் கவனத்தில் கொண்டு நடனம் ஆடுகின்ற போது உடல் வியர்வையை வெளியகற்றப்படுவதுடன், உடலும் பிரகாசம் அடையும். முகமும் மனமும் வானத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். Hiphop, Street Dance, Zumba, Mambo,salsa போன்ற நடனங்கள் சிறந்த உடற்பயிற்சி போன்றே காணப்படுகின்றன. உடலின் அத்தனை உறுப்புக்களும் தொழிற்படுவதுடன் உடற்பயிற்சி செய்கின்றோம் என்னும் உணர்வைத் தராது எம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும். நான் செல்கின்ற நடன வகுப்பிற்கு வயதான பாட்டிகளும் வருகின்றார்கள். 1 மணித்தியாலம் வியர்வையைத் துடைப்பதற்குரிய இடைவெளியைத் தவிர வேறு எந்த ஓய்வும் எடுக்காது துள்ளிக் குதிக்க வேண்டிய இடங்களில் மட்டும் அவதானமாக ஆடுவார்கள். அவர்கள் உற்சாகத்தைப் பார்க்கும் போது எமது மக்கள் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் தம்மை பின்னுக்கு இழுக்கின்றார்கள். வாழும் வாழ்க்கையை வசந்தமாக மாற்ற முயல்வதில்லை என்று சிந்திப்பேன். எமக்கு முடியாது என்றால் முடிகின்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. வெட்கத்தைக் கக்கத்தில் வைத்துவிட்டு எமது வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கை ஒருமுறையே அதை மகிழ்வாக வாழப்பழகிக் கொள்ளவேண்டும்.
(Ein atmen) மூச்சை உள் இழுத்தல் (ausatmen ) மூச்சை வெளியிடுதல்
உடற்பயிற்சி பலவிதமாகச் செய்யப்படுகின்றது. ஓடுகின்ற பயிற்சி செய்கின்ற போது உடல் பருமன் குறைக்கப்படுகின்றது. கலோரிகள் இழக்கப்படுகின்றன. வியர்வை வெளியகற்றப்படுகின்றது. பலவிதமான தோல்நோய்கள் குறைவதற்குரிய சாத்தியக்கூறுகள் வியர்வை வெளியகற்றப்படும்போது காணப்படுகின்றன. காலநிலை சிறப்பாக உள்ள நாடுகளில் வாகனங்கள் ஓடாத மரங்கள் நிறைந்த பகுதிகளில் ஓடுவது சிறந்தது. மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் போது சுத்தக்காற்றைச் சுவாசிக்கக் கூடியதாக இருக்கும்.
குளிர்பிரதேசங்களில் வாழ்பவர்கள் அல்லது மழைகாலங்களில் ஓடுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் (Laufband) பயன்படுத்தலாம். உடற்யிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துகின்ற போது குறிப்பிட்ட பகுதிகளில் தசைகள் தொய்வடையாமல் இறுக்கமடைகின்றன. வயதான தொழுதொழு என்ற தசைகள் காணப்படாமல் இறுக்கமான பகுதிகளாகத் தசைப்பகுதிகள் காணப்படும். உடல் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களுக்கு அதற்குரிய உடற்பயிற்சி கருவிகளைப் பயன்படுத்திச் செய்யலாம். உதாரணமாக இருதயநோயாளிக்கு நேரம் ஒதுக்குவது கடினம் என்றால், உடற்பயிற்சி நிறுவனங்களுக்குச் (Fitness Studio) செல்லலாம். அங்கு சென்றால், மற்றவர்களைப் பார்க்கும்போது ஒரு உத்வேகம் தோன்றும்.
ஐரோப்பியநாடுகளில் வாழ்பவர்கள் மாதம் இரண்டுமுறை Sauna செல்வது நல்லது. காலையில் செல்வது சிறப்பாகும். Sauna எப்போதும் 90 பாகை சென்ரிகிறேட்டில் இருக்கும். சீரான இரத்தஓட்டத்திற்கும் வியர்வை வெளியேறுதலுக்கும் செல்வது சிறந்ததாகும். முதலில் Sauna உள்ளே செல்லும் முன் குளிக்க வேண்டும். பின் ஆக்கூடியது 15 நிமிடங்கள் உள்ளே இருந்து பின் திரும்பவும் உடலை நனைத்த பின் அமைதியாகச் சில நிமிடங்கள் படுத்திருந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்ல வேண்டும். இப்படி 2 தொடக்கம் 3 தடவைகள் உள்ளேயும் வெளியேயுமாய் செல்லவேண்டும். ளுயரயெ முதலில் செல்பவர்கள் 8 நிமிடங்கள் இருக்க வேண்டும். ஒரு கிழமைக்கு 1 தடவை செல்வது போதுமானது. பின் இழந்த நீரைப் பெறுவதற்கு அதிகமான நீர் குடிக்க வேண்டியது அவசியமாகின்றது. பதட்டம் அடையும் இதயத்துடிப்பை ஆற்றியபின் தான் மீண்டும் மற்றைய அலுவல்களில் ஈடுபடலாம். ஐரோப்பியநாட்டவர்களின் உடல் உள்ளிருந்து வெளியே வரும்போது இரத்தச்சிவப்பாகக் காணப்படும். அவர்கள் வெட்கப்பட்டாலும் முகம் சிவக்கும், குளிர் என்றாலும் முகம் சிவக்கும், கோபப்பட்டாலும் முகம் சிவக்கும். பயப்பட்டாலும் முகம் சிவக்கும், அளவுக்கதிகமாகச் சிரித்தாலும் முகம் சிவக்கும். யாராக இருந்தாலும் Sauna சென்று வந்தால் ஒருவித செழிப்பான அழகு, முகத்தில் தெரியும். அநுபவித்துப் பாருங்கள் உண்மை புலப்படும்.
உடம்பைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும், முகத்தின் பிரகாசத்தை அதிகரிக்கச் செய்வதற்கும், பலவித உடல்நோய்களை அகற்றுவதற்கும் யோகாசனம் சிறந்த வழிமுறையாகும். உதாரணமாக ஒழுங்கீனமாகவும் குறைபாடுடையதுமான முள்ளந் தண்டினுடைய உறுதிக்குச் சிறந்தது பத்மாசனம் (Padmasana).
முள்ளந்தண்டு உறுதியாக இருக்கும் பட்சத்தில்தான் எமது உடல் உறுதியடையும். உடலைத் தாங்கும் தன்மையை முள்ளந்தண்டு பெறவேண்டும். எனவே பத்மாசனம் உடலுக்கு அவசியமானது. கோணாசனம் (Konasana) பிரத்தியேகமாக கட்டையான பெண்களுக்கு உரியது.
இது உடலின் சமநிலையைப் பாதுகாக்கின்றது. உஷ்ராசனம் (ushtrasana)வயிற்றிலும் இடுப்பிலும் இருக்கின்ற கொழுப்புத் தன்மையைக் குறைக்கின்றது.
இவ்வாறு யோகாசனம் ஒவ்வொரு நாளும் செய்கின்ற போது பல உடல்ரீதியான, உளரீதியான பல பிரச்சினைகளை நாம் தீர்க்கக் கூடியதாக இருக்கும்.
கண்கவர் படங்களுடன் மனதுக்குகந்த ஆன்மீக கதைகளையும் ஆலயங்களையும் எமக்கு அடையாளங்காட்டி தன் சிறந்த படைப்புக்களின் மூலம் பலரைக் கவர்ந்திழுக்கும் இராஐராஐஸ்வரி அவர்களுடைய http://jaghamani.blogspot.com/ என்னும் வலைப்பூ
குழந்தைகள் உலகம் மகத்தானது. அதில் நம்பமுடியாத திறமைகளும் துடிப்புகளும் நகைச்சுவைகளும் நிறைந்திருக்கும். அத்தனையையும் தெரிந்தெடுத்து அவற்றை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டி எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என்னும் திடகாத்திரமான நம்பிக்கையை விதைக்கின்ற குழந்தைகள் வழங்கிய அறிவுத் துளிகளை அற்புதமாகப் பட்டியலிட்டுக் காட்டுவது மட்டுமன்றி திருக்குறளுக்கு பஞ்சமே இல்லாது பல கட்டுரைகளை தந்துதவுகின்ற திண்டுக்கல்தனபாலன் அவர்களுடைய http://dindiguldhanabalan.blogspot.com/
தான் பெற்ற அநுபவத்தையும் கண்ட காட்சிகளையும் எடுத்துக்காட்டுவதுடன் அறியப்படாத பல தகவல்களைத் தந்து தன் பயண சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்ற ராம்வி நடத்துகின்ற http://maduragavi.blogspot.com/
அற்புதமான கட்டுரைகள். மனித மனங்களின் அலைபாயும் எண்ணங்கள் அவற்றிற்கான காரணங்கள், அறிவுரைகள் இப்படிப் பலவகையான சுவாரஸ்யமான தகவல்களைக் காவி வருகின்ற Dr.P.Kandaswamy அவர்களுடையhttp://swamysmusings.blogspot.com/
இவ்விருது பெற்ற அனைவரும் இவ்வலை உலகில் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று வேண்டிய படி என்னுடைய அன்பு மலர்களை இம்மலர் கொத்துடன் தந்து மகிழ்கின்றேன்.
விருது பெற்றவர்கள் இப்படத்தை உங்கள் பிளாக்கில் இணைத்துக் கொள்ளுங்கள்