Pages

Thursday, March 1, 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான நடைமுறைகள்            கொழுப்பான உடல் வகைகள்

மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. நிறைகூடிய கொழுப்பான உடம்பு:

         உடம்பு முழுவதும் தொளதொளப்பாக உறுதியில்லாது கொழுப்பான  தசையாகத் தோற்றமளிக்கும்

2. நிறைகூடிய நீர்த்தன்மையான உடம்பு( நீர்ச்சதிரம்)
     
       இது கூடுதலாகப் பெண்களுக்கு உடம்பின் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதிகளில் கொழுப்புப் படிந்து காணப்படும் 

3. இரசாயணப் பொருள்களின் தாக்கத்தினால் ஏற்படும் பிரதிபலிப்பால்  ஏற்பட்ட உடம்பு

     இது உடலின் சில பகுதிகளில் மாத்திரம் ஏற்படும். உதாரணமாக நெற்றி,           
     முகத்தின் கீழ்ப்பகுதி, கழுத்தின் பிற்பகுதி, தாடை, முழங்கால், 
     முழங்கை, கால்கள், உதடு போன்ற பகுதிகளில் வீக்கமாகக் காணப்படும். 
     மூட்டுக்களில் வீக்கமும் வலியும் இவ்வுடம்பிற்குக் காரணமாகும். 

எனவே கொழுப்பான பகுதிகளையும் உடல் பருமனையும் குறைக்க வேண்டுமானால் உள்ளமும் உடலும் இணைந்தே தொழிற்பட வேண்டும். 


50 வயது கடந்துவிட்டால் நாம் ஆச்சி என்ற நினைப்பு எமது பெண்களுக்கு  வந்துவிடும். கட்டையில் போகும் வயதில் எதுக்கு எமது உடம்பை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று அலட்டிக் கொள்வார்கள். ஆண்களோ ஆசைப்பட்டதெல்லாம் வயிற்றுக்குள் அடையத் தொடங்கிவிடுவார்கள். உடலில் கவனம் குறைந்துவிடும். தம்மைவிட்டுத் தமது வாரிசுக்களுக்கே தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் வயதாக வயதாக தம்மை அழகுபடுத்தும் பணியில் கூடுதலான அக்கறை காட்டத் தொடங்கிவிடுவார்கள்.  இயற்கையாகவே ஒன்றை இழந்துவிடுவோமேயானால் அதை மீண்டும் பெறுவதற்குரிய வழிவகைகளை தேடித்தானே போக வேண்டும். அதனாலேயே ஐரோப்பியர்கள், உடற்பயிற்சி, நடனம், யோகாசனம், நடத்தல், போன்ற நடைமுறைகளில் தம்மை ஈடுபடுத்துவார்கள்.

             நடனம் என்பது இளமைக்கு மட்டும் சொந்தமானதல்ல. முதுமைக்கும் ஏதுவானதே. அதை அவதானமாகச் செய்தால் அழகு தேடிவரும். வயதான காலங்களில் எலும்புத் தேய்மானங்கள், எலும்பு வருத்தங்கள் ஏற்படுவது இயல்பே. அதனால் அதனைக் கவனத்தில் கொண்டு நடனம் ஆடுகின்ற போது உடல் வியர்வையை வெளியகற்றப்படுவதுடன், உடலும் பிரகாசம் அடையும். முகமும் மனமும் வானத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்.  Hiphop, Street Dance, Zumba, Mambo, salsa போன்ற நடனங்கள் சிறந்த உடற்பயிற்சி போன்றே காணப்படுகின்றன. உடலின் அத்தனை உறுப்புக்களும் தொழிற்படுவதுடன் உடற்பயிற்சி செய்கின்றோம் என்னும் உணர்வைத் தராது எம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும். நான் செல்கின்ற நடன வகுப்பிற்கு வயதான பாட்டிகளும் வருகின்றார்கள். 1 மணித்தியாலம் வியர்வையைத் துடைப்பதற்குரிய இடைவெளியைத் தவிர வேறு எந்த ஓய்வும் எடுக்காது துள்ளிக் குதிக்க வேண்டிய இடங்களில் மட்டும் அவதானமாக ஆடுவார்கள். அவர்கள் உற்சாகத்தைப் பார்க்கும் போது எமது மக்கள் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் தம்மை பின்னுக்கு இழுக்கின்றார்கள். வாழும் வாழ்க்கையை வசந்தமாக மாற்ற முயல்வதில்லை என்று சிந்திப்பேன். எமக்கு முடியாது என்றால் முடிகின்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. வெட்கத்தைக் கக்கத்தில் வைத்துவிட்டு எமது வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கை ஒருமுறையே அதை மகிழ்வாக வாழப்பழகிக் கொள்ளவேண்டும். 

(Ein atmen) மூச்சை உள் இழுத்தல் (ausatmen ) மூச்சை வெளியிடுதல்


                     உடற்பயிற்சி பலவிதமாகச் செய்யப்படுகின்றது. ஓடுகின்ற பயிற்சி செய்கின்ற போது உடல் பருமன் குறைக்கப்படுகின்றது.  கலோரிகள் இழக்கப்படுகின்றன. வியர்வை வெளியகற்றப்படுகின்றது. பலவிதமான தோல்நோய்கள் குறைவதற்குரிய சாத்தியக்கூறுகள் வியர்வை வெளியகற்றப்படும்போது காணப்படுகின்றன. காலநிலை சிறப்பாக உள்ள நாடுகளில் வாகனங்கள் ஓடாத மரங்கள் நிறைந்த பகுதிகளில் ஓடுவது சிறந்தது. மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் போது சுத்தக்காற்றைச் சுவாசிக்கக் கூடியதாக இருக்கும். 

 குளிர்பிரதேசங்களில் வாழ்பவர்கள் அல்லது மழைகாலங்களில் ஓடுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் (Laufband) பயன்படுத்தலாம். உடற்யிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துகின்ற போது குறிப்பிட்ட பகுதிகளில் தசைகள் தொய்வடையாமல் இறுக்கமடைகின்றன. வயதான தொழுதொழு என்ற தசைகள் காணப்படாமல் இறுக்கமான பகுதிகளாகத் தசைப்பகுதிகள் காணப்படும். உடல் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களுக்கு அதற்குரிய உடற்பயிற்சி கருவிகளைப் பயன்படுத்திச் செய்யலாம். உதாரணமாக இருதயநோயாளிக்கு நேரம் ஒதுக்குவது கடினம் என்றால், உடற்பயிற்சி நிறுவனங்களுக்குச் (Fitness Studio) செல்லலாம். அங்கு சென்றால், மற்றவர்களைப் பார்க்கும்போது ஒரு உத்வேகம் தோன்றும்.            ஐரோப்பியநாடுகளில் வாழ்பவர்கள் மாதம் இரண்டுமுறை Sauna செல்வது நல்லது. காலையில் செல்வது சிறப்பாகும். Sauna எப்போதும் 90 பாகை சென்ரிகிறேட்டில் இருக்கும். சீரான இரத்தஓட்டத்திற்கும் வியர்வை வெளியேறுதலுக்கும் செல்வது சிறந்ததாகும். முதலில்  Sauna  உள்ளே செல்லும் முன் குளிக்க வேண்டும். பின் ஆக்கூடியது 15 நிமிடங்கள் உள்ளே இருந்து பின் திரும்பவும் உடலை நனைத்த பின் அமைதியாகச் சில நிமிடங்கள் படுத்திருந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்ல வேண்டும். இப்படி 2 தொடக்கம் 3 தடவைகள் உள்ளேயும் வெளியேயுமாய் செல்லவேண்டும். ளுயரயெ முதலில் செல்பவர்கள் 8 நிமிடங்கள் இருக்க  வேண்டும். ஒரு கிழமைக்கு 1 தடவை செல்வது போதுமானது. பின் இழந்த நீரைப் பெறுவதற்கு அதிகமான நீர் குடிக்க வேண்டியது அவசியமாகின்றது. பதட்டம் அடையும் இதயத்துடிப்பை ஆற்றியபின் தான் மீண்டும் மற்றைய அலுவல்களில் ஈடுபடலாம். ஐரோப்பியநாட்டவர்களின் உடல் உள்ளிருந்து வெளியே வரும்போது இரத்தச்சிவப்பாகக் காணப்படும். அவர்கள் வெட்கப்பட்டாலும் முகம் சிவக்கும், குளிர் என்றாலும் முகம் சிவக்கும், கோபப்பட்டாலும் முகம் சிவக்கும். பயப்பட்டாலும் முகம் சிவக்கும், அளவுக்கதிகமாகச் சிரித்தாலும் முகம் சிவக்கும். யாராக இருந்தாலும் Sauna சென்று வந்தால் ஒருவித செழிப்பான அழகு, முகத்தில் தெரியும். அநுபவித்துப் பாருங்கள் உண்மை புலப்படும்.  

        உடம்பைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும், முகத்தின் பிரகாசத்தை அதிகரிக்கச் செய்வதற்கும், பலவித உடல்நோய்களை அகற்றுவதற்கும் யோகாசனம் சிறந்த வழிமுறையாகும். உதாரணமாக ஒழுங்கீனமாகவும் குறைபாடுடையதுமான முள்ளந் தண்டினுடைய உறுதிக்குச் சிறந்தது பத்மாசனம் (Padmasana). 

முள்ளந்தண்டு உறுதியாக இருக்கும் பட்சத்தில்தான் எமது உடல் உறுதியடையும். உடலைத் தாங்கும் தன்மையை முள்ளந்தண்டு பெறவேண்டும். எனவே பத்மாசனம் உடலுக்கு அவசியமானது. கோணாசனம் (Konasana) பிரத்தியேகமாக கட்டையான பெண்களுக்கு உரியது. 


இது உடலின் சமநிலையைப் பாதுகாக்கின்றது. உஷ்ராசனம் (ushtrasana)வயிற்றிலும் இடுப்பிலும் இருக்கின்ற கொழுப்புத் தன்மையைக் குறைக்கின்றது.


இவ்வாறு யோகாசனம் ஒவ்வொரு நாளும் செய்கின்ற போது பல உடல்ரீதியான, உளரீதியான பல பிரச்சினைகளை நாம் தீர்க்கக் கூடியதாக இருக்கும்.

உள்ளத்தின் உத்வேகம் உடலில் பிரதிபலிக்க
உடலது பொலிவுறும் முகமது செழிப்புறும்
உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்தழகுற
உடற்பயிற்சியதும் துணையாகும்
இரசாயணமற்ற வாழ்வும் உறுதுணையாகும்


    
 


     

8 comments:

 1. உடற்பயிற்சிகள் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி வெகு அழகாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். இதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களுக்கும், மற்ற அனைவருக்குமே நன்கு பயன்படும் பதிவு இது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக சார். ஆனால் எல்லோரும் ஆர்வப்பட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

   Delete
 2. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

  ReplyDelete
 4. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete
 5. உள்ளத்தின் உத்வேகம் உடலில் பிரதிபலிக்க
  உடலது பொலிவுறும் முகமது செழிப்புறும்
  உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்தழகுற
  உடற்பயிற்சியதும் துணையாகும்
  இரசாயணமற்ற வாழ்வும் உறுதுணையாகும்//

  உண்மை, நீங்கள் சொல்வது அனுபவித்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete