Pages

Monday, September 2, 2013

சோறு ஆரோக்கியமான உணவு.

                                 

               
                               ஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உணவுல்லாத ஒரு உணர்வு ஆசியநாட்டவர்களிடையே இருக்கின்றது. அவர்கள்  அத்தியாவசியமான முதல் உணவு அரிசிச்சோறாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மொறக்கோ, துருக்கி, ஆபிரிக்கா, போலந்து, இவ்வாறு பலதரப்பட்ட நாட்டுமக்களுடன் ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் பழகும்போது அவர்களுடைய தேசியஉணவுகளையும் சுவை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அவ்வாறு சுவை பார்க்கின்ற வேளையிலும் தமது தேசியஉணவை அவர்கள் மறப்பதில்லை.
        
                                      அதுபோல் இங்கு வளருகின்ற இளந்தலைமுறையினர் எவ்வாறான உணவுகளை விரும்பினாலும், எமது தேசியஉணவை கூடுதலாக விரும்புகின்றனர். ஒவ்வொருநாளும் விரும்பி உண்ணவில்லையானாலும், எமது உணவில் பிடிப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால், தற்போது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலேயே சோறை வெறுத்து பிட்ஷா, ஹம்பேகர் போன்ற உணவுகளுக்கு இளந்தலைமுறை அடிபணிந்து வாழ்வது அறியக்கூடியதாக இருக்கின்றது. போசாக்கின்றி உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற இவ்வுணவுகளை உண்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இவர்கள் நினைத்துப் பார்பதில்லை. இவ்வுணவுவகைகள் Fastfood என்ற பெயரில் Fast  ஆக எமது உடலைப் பாதிக்கும்  என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
               
                                          அளவுக்கதிகமாக சோற்றை உண்பதுடன் சாப்பிட்டவுடன் ஒரே இடத்தில் அசையாது இருந்து தொலைக்காட்சிகளைப் பார்ப்பது, உண்டவுடன் நீண்ட நேரம் நித்திரை செய்வது போன்ற காரணங்களாலேயே இதிலுள்ள மாப்பொருள் உடற்பருமனை ஏற்படுத்துகின்றது
               
              அரிசிச்சோறு ஒரு மாப்பொருள் உணவு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வரிசிச்சோறானது சுகாதார மேம்பாட்டுப் பண்புகளைக் கொண்டது. இதில் ஆரோக்கிமற்ற கொழுப்பு காணப்படாது. இதில் புரதம், விற்றமின், கனிப்பொருள்கள் காணப்படுகின்றன. இதில் விற்றமின்கள் B1.B6 போன்றவை இருக்கின்றன. பி1 நரம்புகளுக்கும், வளர் தசை  மாற்றத்திற்கு பி6 தோலுக்கும், இரத்தம் உடலில் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.
                
                             பியோட்டின் பொட்டாசியம், துத்தநாகம் போன்றவையும் இதில் காணப்படுக்கின்றன. பியோட்டின் தலைமயிருக்கும் நகத்திற்கும், பொட்டாசியம் இரத்தஅழுத்தத்தை சீராக்குவதற்கும், துத்தநாகம் குளிரான சமயத்தில் உடல் வெப்பநிலையைப் பாதுகாப்பதற்கும், நோய்எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இதில் காபோவைதரேற்று அதிகம் உண்டு.
         
                               அதிகநேரம் பசியைத் தாக்குப்பிடிக்கும் சக்தி சோற்றுக்கு உண்டு. இது இலகுவில் சமிபாடடையும் தன்மையுள்ளதால் வயிறு குடல் சம்பந்தமான நோயுள்ளவர்களுக்கும் சோறு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது. அரிசிச் சோறு தேவையில்லாத உடலுக்குள் இருக்கும் நீரை வெளியகற்றும்  சக்தி கொண்டது. அதனால், உடலினுள் உள்ள நஞ்சுப் பொருள்கள் சிறுநீராக சிறுநீர்ப்பை ஊடாக வெளியகற்றும்.
இவ்வாறான சிறப்புகள் கொண்ட எமது தேசிய உணவை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.

Saturday, August 31, 2013

நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்

       

     

        வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு
       பேரிகொண்டு நீர்திரண்டு பெய்ய வேண்டும் - அதுபோல்
       நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்
       நீரழிவு நின்னுடலில் நேரவேண்டும்.  நீர்நிலைகள், வெள்ளம், கடல், போன்றவற்றிலிருந்து நீரை மொண்டு மேகமானது இருண்டு மழையைப் பொழிய வேண்டும். அதுபோல் நீரை அருந்தி தாகம் நீங்கி நீங்கள் உயிரோடு வாழவேண்டுமென்றால், உங்கள் உடலிலே இருந்து நீர் சரியான முறையில் சிறுநீராகவோ வியர்வையாகவோ வெளியகற்றப்படவேண்டும். இல்லையெனில் உடலெங்கும் நீர் விஷமாக்கப்பட்டு உங்கள் உயிர் உலகத்தைவிட்டு நீங்கிவிடும்.


       நீரழிவு நோய் ஏற்படவேண்டும்.  என்று தப்புக் கணக்குப் போட்டுவிடவேண்டாம்.             
      

             

Sunday, February 10, 2013

வீட்டு வைத்தியம்1. வீட்டில் இருமல், தடிமல்  தொல்லைகளுக்கான கைவைத்தியம்

அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரித்து அதன்மேல் இந்த நசித்த சூடான உருளைக்கிழங்கை நன்நாகப் பரப்பி அதன்மேல் ஒரு துணியைப் போட்டுவிடவும். பின் ஒரு துணியால் மார்புப் பகுதியைச் சுற்றிக்கட்டவும். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் விடவும்.

2. தடிமல்:

ஒரு லீட்டர் கொதித்த நீரை  ஒரு பாத்திரத்தில் விட்டு 9 கிராம் உப்பை அதனுள் போட்டு அந்த நீராவியின் மேல் முகத்தைப் பிடிக்கவேண்டும். அப்போது அந்நீராவி வெளியே போய்விடாமல் ஒரு துணியால் மூடவேண்டும். (ஆவி பிடித்தல்
போல்)

3. காதுவலி:

வெங்காயத்தை வெட்டி ஒரு தாய்ச்சியில் சூடாக்கவேண்டும். பின் ஒரு துப்பரவான துணியில் இச்சூடாக்கிய வெங்காயத்தைக் கட்டி வலியுள்ள காதின்மேல் மேல் வைக்கவும். ஒரு மணித்தியாலங்கள் அளவில் அப்படியே இருக்க விடவும்.

4. தொண்டைநோ:

ஒரு துணியில் தயிரை நன்றாகப்பிரட்டவும். இல்லையென்றால் ஒரு துணியை தயிரில் அழிழ்த்திப் பிழிந்து எடுக்கவும். கழுத்தைச் சுற்றி இத்துணியைப் போடவும். பின் வேறு ஒரு துணியை அதன் மேல் சுற்றி நீண்டநேரம் விடவும்.

5. காய்ச்சல்:

இரண்டு துணிகைளை சாதாரண தண்ணீரில் துவைத்து எடுக்கவும். அந்நீரைப் பிழிந்து எடுத்த துணியை முழங்காலின் கீழ்ப்பகுதி பாதம் இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில்  இரண்டு கால்களிலும் சுற்றிவிடவும். 10, 15 நிமிடங்கள் குளிரவிடவும். பலதடவைகள் இதைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்.

Thanks to Vigo magazin